`சிறுநீரக பாதிப்பு; தீவிர சிகிச்சை’ - தவிக்கும் ரஜினி மன்ற முன்னாள் நிர்வாகி சத்யநாராயணன்
சத்ய நாராயணன், ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர். 1990-களில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இவரை ரஜினியின் தளபதி என்றே சொல்வார்களாம். ரஜினியின் நம்பிக்கையை பெற்று அவரது ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் வலம் வந்து ரஜினிக்கும், ரசிகர்களுக்கும் பாலமாக இருந்து ரசிகர் மன்றத்தை வளர்த்தவர். கட்டுக்கோப்பாக மன்றத்தை வழி நடத்தி சமூகத்தில் ரஜினி ரசிகர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்தவர் என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சத்யநாராயணன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் வேண்டுவதுடன் போதிய வசதியின்றி பொருளாதார நெருக்கடியில் உள்ள சத்யநாராயணன் சிக்ச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், ரஜினி சார் அவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசிய ரஜினி ரசிகர்கள் சிலர், `சத்ய நாராயணன் முதலில் ரஜினியின் கால்ஷீட் மற்றும் பைனான்ஸ் ஆகியவற்றை கவனித்து வந்தார். பின்னர் ரஜினி அவரை, ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநில பொறுப்பாளராக நியமனம் செய்தார். ரஜினியின் முகமாக இருந்து அவரது எண்ணப்படி தமிழகம் சுற்றி வந்து ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைத்து வளர்த்தார் சத்ய நாராயணன். இதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.
மன்ற நிர்வாகிகளின் இல்ல சுபநிகழ்ச்சிகள் தொடங்கி அனைத்திலும் கலந்து கொள்வார். குடும்பத்தில் ஒருவராக பழகி வழி நடத்தியதால் சத்யநாராயணனை தளபதி என்றும், ரஜினியை தலைவர் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். நிர்வாகிகளின் எண்ணங்களை ரஜினியிடம் சேர்த்து மன்றத்தின் வளர்ச்சிக்கு பலமாக இருந்தார், ரஜினியில் வலதுகரமாக வலம் வந்த சத்யநாராயணனுக்கு மன்ற நிர்வாகிகள் ரஜினிக்கு நிகரான மரியாதை கொடுத்தனர்.
இந்த நிலையில் சில காரணங்களால் மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து சத்ய நாராயாணன் விடுவிக்கப்பட்டார். அப்போது சத்ய நாராயணன் கஷ்டமின்றி வாழ்வதற்கும் ரஜினியால் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிக்கும், சத்ய நாராயணாவுக்கும் எவ்வித தொடர்பில்லாமல் போனது. ஆனால் மன்ற நிர்வாகிகள் பலரும் சத்யநாராயணனுடன் இப்போதும் நட்பில் உள்ளனர். உடல் நல குறைப்பாட்டுடன் இருந்த சத்யநாராயணன் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து பாதிப்பு அதிகரித்த நிலையில் தற்போது கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த பத்து நாட்களாக சிகிச்சையில் இருக்கும் அவருக்கு தினமும் சுமார் ரூ 25,000 செலவாகிறது. சிகிச்சைக்கான செலவுக்கு பணம் இல்லாமல் சத்யநாராயணன் தரப்பு தவிக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் ரஜினி வீரமணி, திருவாரூர் மாவட்டத் தலைவர் தாயுமானவன் மருத்துவமனையில் அவருக்கு ஒத்தாசையாக இருந்து கவனித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரஜினி, சத்யநாராயணனை நேரில் பார்த்து நலம் விசாரித்தால் அவர் குணமாகி விடுவார். அந்தளவு ரஜினி மீது அளவு கடந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளார். இக்கட்டான சூழலில் இருக்கும் சத்யநாராயணனை ரஜினி சார் தான் காப்பற்ற வேண்டும்’ என்றனர்.
சத்யநாராயணன் மருத்துவமனையில் இருக்கும் தகவல் ரசிகர் மன்ற தலைமை மூலம் ரஜினிக்கு தெரிவிக்கப்படும் என்று மன்ற நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.