Gauri Khan: `திருமணத்திற்கு பின் ஏன் கணவரின் மதத்திற்கு மாறவில்லை'- ஷாருக் மனைவி கெளரி கான் விளக்கம்
நடிகர் ஷாருக் கான் தனது மனைவி கெளரி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாருக் கான் முஸ்லிமாக இருந்தாலும், இந்துவான கெளரி கான் திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் மதத்திற்கு மாறவில்லை. தொடர்ந்து இந்துவாகவே இருக்கிறார். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், திருமணத்திற்கு பல்வேறு சவால்களைச் சந்தித்தனர். அவர்கள் சந்தித்த பிரச்னைகள் மற்றும் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கரண் ஜோகருடன் கெளரி கான் பகிர்ந்து கொண்டார். அதில், ``எனது கணவரின் மதத்திற்கு மதிப்பளிக்கிறேன். அதற்காக நான் மதம் மாறவேண்டும் என்று அர்த்தம் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒவ்வொருவரும் தனித்துவத்துடன் அவரவர் மதத்தை பின்பற்றவேண்டும் என்பது எனது எண்ணம்.
அடுத்தவர் மதத்தை அவமரியாதை செய்யக் கூடாது. ஷாருக் கான் ஒருபோதும் எனது மதத்தை அவமதித்தது கிடையாது. அதே சமயம் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் எனது குடும்பத்திலும் சவால்களை சந்தித்தேன். வீட்டில் தீபாவளி, ஹோலி போன்ற அனைத்து பண்டிகைகளின் கொண்டாட்டத்தையும் நானே பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்வேன். எனது மகன் ஆர்யன் கான் தன்னை முஸ்லிமாக அறிமுகப்படுத்திக்கொண்டாலும், அவனிடம் இந்து மதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவன் அவனது தந்தைக்கு மிகவும் நெருக்கமாகும்.
ஷாருக் கானின் பெற்றோர் இறந்துவிட்டதால் அவரை வழிநடத்த பழைய தலைமுறை இல்லாமல் இருந்தது. அந்த பொறுப்பையும் நானே எடுத்துக்கொண்டேன்'' என்றார். 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஷாருக் கான் மற்றும் கெளரி கான் தம்பதி டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவர். கெளரி கானுக்கு 14 வயதாக இருந்தபோது ஷாருக் கான் அவரை முதல் முறையாக பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார். அப்போது ஷாருக் கானுக்கு 18 வயதாகும். அந்த வயதிலேயே ஷாருக் கான் கெளரியை காதலிக்க தொடங்கினார். ஆனால் கெளரி தொடர்ந்து ஷாருக் கானின் காதலை நிராகரித்து வந்தார். அதன் பிறகுதான் ஷாருக் கான் காதலை ஏற்றுக்கொண்டார். தற்போதும் ஷாருக் கானுக்கு டெல்லியில் வீடு இருக்கிறது. ஷாருக் கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.