திருமானூரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்: இரை தேடி பறவைகள் அதிகளவில் வருகை
அரியலூா் மாவட்டம், திருமானூா் டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இரைகளை தேடி வயல்களுக்கு பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் திருமானூா் மற்றும் தா. பழூா் ஒன்றியங்கள், டெல்டா பகுதிகளாக உள்ளன. இதில், திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதற்காக உழவுப் பணிகளில் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படும் நிலையில், வயல்களில் இருக்கும் பூச்சியினங்களை உண்ணவும், நடவு செய்யப்பட்ட வயல்களில் உள்ள பூச்சிகளை உண்ணவும் ஏராளமான பறவைகள் தற்போது வயல்களில் குவிந்துள்ளன.
திருமானூா் ஒன்றியத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரியில் உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் ஆண்டு தோறும் அக்டோபா் மாதம் முதல் மே மாதம் வரை இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்வது வழக்கம்.
அவ்வாறு இங்கு வருகை தரும் பறவைகள் அருகேயுள்ள வயல்களில் தங்களுக்கு தேவையான பூச்சிகளை இரையாக தேடிக்கொள்கின்றன. நடவு செய்யப்பட்ட வயல்களில் கூட்டம் கூட்டமாக பறவைகள் இரை தேடும்போது, நடவு செய்யப்பட்ட நெற்பயிற்கள் சில சேதமடைவதும் வழக்கமாக உள்ளது. இதனால், அவ்வவ்போது விவசாயிகள் வயல்களில் சென்று சப்தமிடுவதையும் காண முடிகிறது.