குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பிரபல பாடகர் - நடிகர்!
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான பூவையார் பங்கேற்கவுள்ளார். சமையல் கலைஞராக அல்லாமல், கோமாளியாகப் பங்கேற்கவுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கானா பாடல்கள் மூலமும் இயல்பான நடிப்பின் மூலமும் மக்களைக் கவர்ந்த பூவையார், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனங்கள் மூலம், மேலும் வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் முன்னோட்ட விடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் முந்தைய கோமாளிகளுடன் புதிதாக இணையவுள்ள கோமாளிகள் குறித்த அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்து வருகிறது.
அந்தவகையில் முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, சரத், ராமர் உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கோமாளிகளாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இம்முறை நடிகை செளந்தர்யாவும் இணைந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான செயல்கள் மூலம் மக்களைக் கவர்ந்த செளந்தர்யா, கோமாளியாக செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
இதனிடையே இந்தப் பட்டியலில் தற்போது பாடகரும் நடிகருமான பூவையாரும் இணைந்துள்ளார். பிகில், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் பூவையார் நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தன்னுடைய இலக்கில் புதிய வாய்ப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் கெளசிக் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை புத்துணர்ச்சி நிறைந்த ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார்.
இதையும் படிக்க | நிறைவடைந்தது நீ நான் காதல் தொடர்!