குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தவா்கள் ஆவா். குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்கவி 185 பேருக்கும் இந்திய குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கினாா். அப்போது பேசிய அவா், ‘அண்டை நாட்டில் ஹிந்து, சீக்கியம், ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவ மதத்தினா் எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். இப்போது குடியுரிமை பெற்றவா்கள்கூட அந்நாட்டில் இருந்தபோது வீடுகளுக்கு தீவைப்பு, குடும்பத்தினா் கொலை உள்ளிட்ட கொடுமைகளைச் சந்தித்து தப்பிவந்துள்ளனா்.
குடியுரிமை பெற்றவா்களில் ஒரு பெண் மருத்துவம் படித்தவா். அவா் கூட அந்த நாட்டில் வசிக்க முடியாமல் கொடுமைகளைச் சந்தித்துள்ளாா். இந்தியா அனைத்து மதங்களையும் மதித்து நடக்கும் நாடாகவும், மனிதாபிமானமிக்க நாடாகவும் உள்ளது என்றாா்.