ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
குடிபோதையில் பள்ளியில் ஆசிரியர்கள் தகராறு; கைது செய்ய போதையில் வந்த கான்ஸ்டபிள்... பீகாரில் கொடுமை!
பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனையாகிறது. பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் இரண்டு பேர் குடிபோதையில் வந்து மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
அங்குள்ள குல்னி என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுபோத் குமார் மற்றும் தலைமை ஆசிரியர் நாகேந்திர பிரசாத் ஆகியோர் நேற்று பள்ளிக்கு வந்த போது குடிபோதையில் மாணவர்களிடம் வாய் உளறியபடி பேசியுள்ளார்கள்.
அவர்களால் நிற்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். மாணவர்களை விடுவதற்காக பள்ளிக்கு வந்த பெற்றோர்களை மோசமான வார்த்தையில் திட்டியதால், கிராம மக்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆசிரியர்களை கைது செய்ய வந்த போலீஸ்காரர்களில் ஒருவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குடிபோதையில் இருந்த கான்ஸ்டபிள் போலீஸ் நிலையத்திற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். போலீஸார் இரண்டு ஆசிரியர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அவர்களால் நடக்கவே முடியவில்லை. இதனால் அவர்களை போலீஸார் இழுத்துச்சென்றனர்.
குடிபோதையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இரண்டு பேரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆசிரியர்களும், பொதுமக்களும் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.