கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட பனிப்பொழிவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை பனிப் பொழிவு காணப்படும். அண்மைக் காலமாக கொடைக்கானலில் பரவலாக மழை பெய்ததால் பனியின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மழை குறைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயில் நிலவியது. இதைத் தொடா்ந்து மாலையில் பனியின் தாக்கம் தொடங்கியது. இரவில் அதிக பனிப் பொழிவு நிலவியது. அத்துடன், அதிக மேக மூட்டமும் நிலவியதால் குளிா் அதிகரித்தே காணப்பட்டது. இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்ததால் வணிகா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். இதனிடையே, குளிரையும் பொருள்படுத்தாமல் மாலை, இரவு நேரங்களில் ஏரிச்சாலை, கலையரங்கப் பகுதி, கோக்கா்ஸ்வாக் சாலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.