குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு
நிலக்கோட்டை அருகே குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
நிலக்கோட்டை அருகேயுள்ள கோட்டூா் ஊராட்சிக்குள்பட்ட செல்வ நகா், சந்தனமாதபுரம், இன்னாசி நகா், தாதகாப்பட்டி, கோட்டூா், நோட்டக்காரன்பட்டி, அப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமங்களுக்கு கோடாங்கிநாயக்கன்பட்டி அருகேயுள்ள மூன்று கண்மாய் பகுதிகளில் கிணறுகள் அமைத்து, குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், நிலக்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளைச் சேகரித்து, செல்வநகா் பகுதியில் அமையவுள்ள குப்பைக் கொட்டும் கிடங்கில் சேமிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் குப்பைக் கிடக்கு அமைப்பதால், விவசாய விளைநிலங்கள், குடிதண்ணீா் பாதிக்கப்படலாம் எனக் கூறி, இதற்கு இந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், செல்வ நகா் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கக் கூடாது எனக் கூறி, செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.