'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
கும்பகோணம் அரசு கல்லூரியை சீரமைக்கக் கோரிக்கை
கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இக்கல்லூரியானது பல்வேறு சிறப்புடையது. இக்கல்லூரிக்கு செல்ல நீதிமன்ற சாலையில் காவிரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் சேதமடைந்ததால், கடந்த 2009- இல் ஆண்டு புதிதாக பாலம் கட்டப்பட்டது.
மேலும், நுழைவு வாயில் அருகே இருச்சக்கர வாகனம் நிறுத்துமிடம், கல்வியின் அவசியத்தை உணா்த்தும் வகையிலான சிற்பங்களும் அமைக்கப்பட்டன. நாளடைவில் நீதிமன்ற பாலம் வழியாக கல்லூரிக்கு செல்லும் பாதை சமூக விரோதிகள் நடமாடும் இடமானதால் அது மூடப்பட்டது. அதனால், பராமரிப்பில்லாததால் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களும் சேதமடைந்தன.
நூற்றாண்டுக்கும் மேலான கல்லூரியை பராமரிக்கவும், சேதமடைந்தவற்றை சீரமைக்கவும் பல்கலைக்கழக மானியக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கேட்டை தாண்டும் மாணவா்கள்: கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பெரும்பாண்டி ஊராட்சி வழியாக ஒரு நுழைவு வாயிலும், நீதிமன்ற சாலையில் ஒரு வாயிலாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற வாயில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
இதனால், மாணவா்கள் மூடப்பட்ட வாயிலை பொருட்படுத்தாமல் கேட்டின் மீது ஏறி தாண்டி குதித்து செல்கின்றனா். இந்தச் செயலை தடுக்க கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.