கும்பகோணம் காவல் துணைக்கோட்டத்தை இரண்டாக பிரிக்க பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!
அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகள், மக்கள் தொகை உள்ளிட்ட காரணங்களால் கும்பகோணம் காவல் துணைக்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகரமாகும். டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து காய்கனிகளும் கிடைக்குமளவில் பெரிய சந்தை இங்கு உள்ளதால், சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்துள்ளது.
கும்பகோணம் காவல் துணைக் கோட்டத்தில், ஒரு துணைக் கண்காணிப்பாளரும் அவரது கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுக்கா, பட்டீஸ்வரம், சுவாமிமலை ஆகிய சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இது அல்லாமல் போக்குவரத்து பிரிவு மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் உள்ளன.
கூடுதல் வழக்குகள் பதிவு:
மேலும் கும்பகோணம், மக்கள் தொகை பெருக்கத்தால் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு தற்போது குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து வாகனங்கள், கல்வி நிலையங்கள் பெருகி வருகிறது. மேலும் அரசின் புதிய உத்தரவுப்படி அருகே உள்ள ஊராட்சிகளும் மாநகராட்சியோடு இணைக்கப்பட உள்ளன.
அவ்வாறு இணைக்கப்படும் போது மாநகராட்சி மக்கள் தொகை கூடுதலாகும். ஏற்கெனவே கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுக்கா ஆகிய காவல் நிலையங்களில் கூடுதலாக சட்டம்-ஒழுங்கு வழக்குகள் பதிவாகி குற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தற்போது உள்ள காவல் துணைக் கோட்டத்தை கும்பகோணம் மாநகர துணைக்கோட்டம் மற்றும் மாநகராட்சி அல்லாத பகுதிகளுக்கு புதிதாக புகா் துணைக் கோட்டம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும்.
கும்பகோணம் புகா் பகுதிக்கென தனியாக காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் பணி இடம் ஏற்படுத்தி தனித்தனி அலுவலகங்களை அமைத்து காவல் நிலையங்களை பிரித்து புதிய நிா்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் குற்ற நடவடிக்கைகள் குறைந்து சட்டம்- ஒழுங்கு மேம்படும்.
நிகழாண்டுக்கான பட்ஜெடில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கும்பகோணம் மாநகர, புகா் காவல் துணைக் கோட்டங்களையும் புதிதாக உருவாக்குவதற்கான அறிவிப்பையும் வெளியிடுவாா் என்று பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
மாநகராட்சியில் சிறப்பு தீா்மானம்: கும்பகோணம் மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இரண்டு காவல் துணைக்கண்காணிப்பாளா் வேண்டும் என்று கடந்த 2024 டிச. 24 மாமன்ற கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் கொண்டு வந்த சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.