புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரி...
குறுக்கே வந்தப் பூனை; அடித்து, உயிரோடு கொளுத்திய மூடநம்பிக்கையாளர்கள்... உபி-யில் அதிர்ச்சி சம்பவம்!
குறுக்கே பூனை வந்ததால், அந்தப் பூனையை உயிரோடு எரித்து கொலைசெய்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியில் ஒரு பெண்ணும் அவரது நண்பரும் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, அந்த வழியே காட்டுப்பூனை ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. பூனை குறுக்கே வந்தது கெட்ட சகுனம் என்ற மூடநம்பிக்கைக் கொண்ட அவர்கள், கண்மூடித்தனமான ஆத்திரத்தில் அந்தக் காட்டுப் பூனையைப் பிடித்து அடித்ததோடு, உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தீ வைத்து எரித்துக் கொன்றதை வீடியோவாகவும் தங்கள் செல்போனில் எடுத்துள்ளனர். அதை சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து, போஜ்பூர் காவல் நிலையத்துக்கு இ-மெயில் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். பெண் பயணித்த பைக் எண் குறித்து விசாரித்ததில், போஜ்பூரைச் சேர்ந்த பிரியா என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, பிரியா மற்றும் அவரது நண்பர் மீது காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.