Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் தண்டனை விதித்த அரசு!
இயேசு கிறிஸ்துவின் முடி வெட்டுதல் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததற்காக இந்தோனேசியாவில் உள்ள நீதிமன்றம் ஒரு திருநங்கைக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது .
டிக்டோக்கில் 4,42,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ரது தலிசா, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக நகர நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
தலிசா டிக்டோக்கில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டபோது ஒரு பின்தொடர்பவர் அவரது தலைமுடியை ஆண்கள் போல வெட்டிக்கொள்ளும் கேட்டார். அதற்கு பதிலளித்த தலிசா, தனது தொலைபேசியை உயர்த்தி இயேசுவின் படத்தைக் காண்பித்து, "நீங்கள் அவருடைய தந்தையைப்போல தோற்றமளிக்க உங்கள் தலைமுடியை வெட்ட வேண்டும்" என்று கூறினார். தலிசா இப்படிப் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, விவாதங்களைக் கிளப்பியது. பலரும் இத்தகைய செயலுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

மாவட்ட நீதிமன்றம், தலிசாவின் கருத்துக்கள் "பொது ஒழுங்கு" மற்றும் "மத நல்லிணக்கத்தை" சீர்குலைக்கும்படி உள்ளதாகக் கூறியிருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் தலிசாவுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தும், குற்றத்திற்காக £4,711 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குநர் உஸ்மான் ஹமீத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில், "பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் மத வெறுப்பைப் பரப்புவதை இந்தோனேசியா தடை செய்ய வேண்டும் என்றாலும், தலிசாவின் பேச்சு அந்த வரம்பை எட்டவில்லை" என்று கூறியிருக்கிறார். மேலும் தலிசாவின் தண்டனையை ரத்து செய்யவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.