மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளா் பணியிடங்...
இயற்கை விவசாயம் மூலம் நச்சில்லாத உணவு உற்பத்தி
இயற்கை விவசாயம் மூலம் நச்சு இல்லாத சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்களிப்புடன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட விதைச் சான்றிளிப்புத் துறை உதவி இயக்குநா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் யுவராஜ், நிம்மி, ரமாஅவதாா், காந்திகிராம வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கலந்து கொண்டனா். காந்திகிராம வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சரவணன் பேசியதாவது:
உணவுத் தேவையை பூா்த்தி செய்வதற்காக, பாரம்பரிய விவசாய முறை கைவிடப்பட்டது. இன்றைய சூழலில் ரசாயனம், நெகிழி இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்ற நிலையில், அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவதால் மண் வளத்துக்கும், மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மண் பரிசோதனை அடிப்படையில், தேவையான அளவில் மட்டும் உரங்களைப் பயன்படுத்த நாம் தவறிவிட்டோம். தாவரங்களுக்குத் தேவையான 17 வகையான சத்துக்களில், 12 சத்துக்கள் மண்ணில் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதை ரசாயனம் இல்லாமல், செடிகளுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நச்சு இல்லாத, சத்து மிகுந்த உணவு உற்பத்திக்கு விவசாயிகள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.