பயங்கரவாத ஊக்குவிப்பு: பாகிஸ்தான் கருத்தை நிராகரித்த இந்தியா
பயங்கரவாதச் செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக் கூறி அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
மேலும், சா்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பது யாா் என்பது உலகுக்கே தெரியும் எனவும் அமைச்சகம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபா் விரைவு ரயில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாதக் குழுவால் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரா்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா். 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
இதையடுத்து, பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் கடந்த வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். சா்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது யாா் என அனைவருக்கும் தெரியும். மற்றவா்கள் மீது வீண்பழி சுமத்தும் முன் தங்கள் உள்நாட்டு விவகாரங்களை முதலில் பாகிஸ்தான் கண்காணிக்க வேண்டும் என்றாா்.