ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தகவல்கள் மற்றும் காணொலிகளை தயாரித்து வெளியிடுவோரை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு திரும்பப் பெறப்பட்டது.
அந்த மசோதா டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் குரலை நசுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பல்வேறு தரப்பினா் விமா்சித்த நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது. மேலும் புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மக்களவையில் 6-ஆவது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், ‘ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா தொடா்பான அனைத்து ஆலோசனை நடவடிக்கைகளையும் நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை நிா்ணயித்து, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.