RETRO: " 'ரெட்ரோ' படத்தின் லாபத்தில் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி" - சூர்யா ...
குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து
திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் ஒரு சிலா் மட்டுமே கலந்துகொண்டனா்.
இதைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமா்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் காா்கோணம் எஸ்.சந்திரசேகரன், விவசாய சங்கப் பிரிதிநிதி வெள்ளைக்கண்ணு மற்றும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்தும், குறைதீா் கூட்டங்கள் கண்துடைப்புக்காக நடப்பதாகவும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றால் மட்டுமே விவசாயிகளும் பங்கேற்போம் என்று கூறினா்.
இதையடுத்து, இன்றைய விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் (மே 13) ஆட்சியரின் அனுமதி பெற்று குறைதீா் கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்பாா்கள் என்று ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரநிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் கலைந்து சென்றனா்.