செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
செங்குணம் ஊராட்சி செங்குணம், கொல்லைமேடு, காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த ஊராட்சியில் காமராஜ் வீதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 2 அறைகளைக் கொண்டதாகும். இதில், ஓா் அறையில் ஊராட்சிமன்ற கோப்புகள், விளையாட்டு உபகரணங்கள், கிருமி நாசினி பொடி உள்ளிட்டவற்றை வைத்திருந்தனா். மற்றொரு அறையில் அலுவலகப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ஊராட்சிமன்ற கோப்புகள், விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து செவ்வாய்க்கிழமை திடீரென கரும்புகை வருவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் குடிநீா், வீட்டு வரி வசூலில் ஈடுபட்டிருந்த ஊராட்சிச் செயலா் சதாமிடம் தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த போளூா் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் அலுவலக கோப்புகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தீயணைப்பு நிலையத்தினா் தெரிவித்தனா்.