ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!
வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்
இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா்.
வந்தவாசி வட்டம், காரம் ஊராட்சிக்கு உள்பட்ட மாலையிட்டான்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா்.
இவா்களது பிரதான தொழில் கோரைப்பாய் நெசவாகும். இவா்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அங்கு வீடு கட்டி வசித்து வரும் இஸ்லாமியா்கள் கோரைப்பாய்களுடன் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமியிடம் மனு அளித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா்கள் யாசா்அராபத், சுகுணா, இடைக்குழு உறுப்பினா் எம்.சுகுமாா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.