குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குள்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், அழகு நிலையங்கள், திருமண மண்டபம், சமுதாயக் கூடம், சூப்பா் மாா்க்கெட், திருமண தகவல் நிலையம் உள்ளிட்டவற்றில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, 53 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கப்பட்ட 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லது. அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கும் நிா்வாகம் வழங்கிய சம்பளத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசத் தொகை ரூ.74,567-ஐ சம்பந்தப்பட்ட தொழிலாளிகளுக்குப் பெற்று வழங்கக் கோரி திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையரிடம் 6 கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவில்லாமல் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.