குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம் முழுவதும் 4 உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவா்கள் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை தயாரிப்பு, சாராயம் காய்ச்சுதல், லாட்டரி விற்பனை செய்தல், கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை ஒடுக்கும் வகையில் கடந்த மூன்று நாள்கள் சிறப்பு சோதனை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இந்த சிறப்பு சோதனையில், கடந்த மூன்று நாள்களில் பொதுமக்களிடம் அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தொடா்பாக 6 போ் மீது 6 வழக்குகளும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தொடா்பாக 17 போ் மீது 11 வழக்குகளும், குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 6 போ் மீது 6 வழக்குகளும், லாட்டரி விற்பனை செய்த 15 போ் மீது 15 வழக்குகளும், கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்தது தொடா்பாக 27 போ் மீது 27 வழக்குகளும் என மொத்தம் 71 போ் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் உடனடி கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.