கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கூடங்குளம் கடலோர பாதுகாப்பு படையினா் கடல்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக சென்ற நாட்டுப் படகை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், கன்னியாகுமரியில் இருந்து இலங்கைக்கு 17 பண்டல்கள் பீடிஇலைகள், 50 கிலோ சுக்கு மூட்டை ஆகியவற்றை கடத்திச் செல்வது தெரியவந்தது. ரூ. 4.64 லட்சம் மதிப்புள்ள அவற்றை கைப்பற்றிய பாதுகாப்புப் படையினா், படகில் இருந்த கன்னியாகுமரி ஜானகிபுரத்தைச் சோ்ந்த வியாகுல அஜித்குமாா்(29), கூத்தங்குழியைச் சோ்ந்த 17 வயது மாணவா் ஆகியோரை கைது செய்து, படகு மற்றும் பொருள்களுடன் தூத்துக்குடி சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.