சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!
பாஜக தலைமையிலான தில்லி அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.
தலைநகரில் பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்குத் தடைவிதிக்கும் நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக அரசு இந்த நடவடிக்கையை ஆதரித்து, மாசுக் கட்டுப்பாட்டு முயற்சிகளில் இது ஒரு அவசியமான நடவடிக்கை என்று கூறிய நிலையில் சிசோடியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா கூறுகையில்,
தில்லியின் சாலைகளிலிருந்து 61 லட்சம் வாகனங்களை அகற்ற பாஜக அரசு ஒரு கொடுங்கோல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தங்கள் வாகனங்களைக் கவனமாகப் பராமரித்த குடும்பங்கள் தற்போது தண்டிக்கப்படுகின்றன. 10 ஆயிரம் கி.மீட்டருக்கும் குறைவான தூரம் பயணித்த வாகனங்களும் தகுதியற்றதாகக் கருதப்படுகின்றன,
அதோடு உத்தரவை மீறிச் செயல்படுவோர் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் என்ன? வாகன உற்பத்தியாளர்களுக்கா? பழைய இரும்பு சரக்கு வியாபாரிகளுக்கா அல்லது நம்பர் பிளேட் நிறுவனங்களுக்கா? இதனால் யாருக்கு லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.
டாக்ஸி கட்டணம் அதிகரிக்க அனுமதிக்கப்படுவதற்குச் சற்று முன்பு இந்த உத்தரவு வந்தது தற்செயலானதா? இது பாஜகவின் பாசாங்குத்தனம் என்று குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவை ஒரே இரவில் அவசரச் சட்டத்தின் மூலம் மீறியுள்ளனர். இப்போது 61 லட்சம் தில்லி குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.