கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கியது.
பொதுவாக, ஒரு போர் விமானத்தை, இவ்வாறு சரக்குப் போக்குவரத்து விமானம் மூலம் தூக்கிச் செல்லும் நடைமுறை அரிது என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் பிரிட்டனின் விமானப் படைக்குச் சொந்தமான எஃப்-35பி ரக போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டு வாரத்துக்கும் மேல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானத்தை, கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பர மாடலாகவே பயன்படுத்தத் தொடங்கியிருந்தது.
போர் விமானத்தின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பிரிட்டன் விமானப் படை விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. குறைவான எரிபொருள் இருந்ததால் தொடா்ந்து இயக்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டன் விமானி அனுமதி கேட்டதையடுத்து, கடந்த ஜூன் 14ஆம் தேதி தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்று இந்திய விமானப் படை தரப்பில் கூறப்பட்டது.
இதனை இயக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே, சரக்குப் போக்குவரத்து விமானம் மூலம், போர் விமானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விளம்பர மாடலா?
பிரிட்டன் போர் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்திக்கொண்டது.
கேரள சுற்றுலாத் துறையின் ‘எக்ஸ்’ பக்கத்தில் கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை மரங்கள் சூழ்ந்த பசுமையான பின்னணியில் பிரிட்டன் போா் விமானம் நிற்பது போன்ற சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘கேரளம் மிகவும் ரம்மியமான இடம். நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. இங்கு நீங்களும் சுற்றுலா வர பரிந்துரைக்கிறேன்’ என்று பிரிட்டன் போா் விமானம் கூறுவது போன்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
After Britain's F-35 fighter jet made an emergency landing at Thiruvananthapuram International Airport last month, work began on lifting it off the ground using a C-17 Globemaster transport aircraft.