பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஆதார் எண்ணும் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுநாள்வரையில், பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு அல்லது அடையாளச் சான்று மட்டுமே போதுமானதாக இருந்து வந்தது. ஆனால், இனிமேல் ஆதார் எண் இருந்தால் மட்டுமே பான் கார்டு விண்ணப்பிக்க முடியும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
ஜூலை முதல்தேதியில் இருந்து அமலுக்கு வந்த இந்த நடைமுறையால் டிஜிட்டல் இந்தியா முயற்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், வரி ஏய்ப்பு, போலி பான் கார்டுகளைத் தடுக்கவும், அடையாளச் சரிபார்ப்பு, வரி தாக்கல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற முடியும் என்றும் அரசு தெரிவித்தது.
அரசின் தரவுகளின்படி, 2024 மார்ச் வரையில் நாட்டில் சுமார் 74 கோடி பேர் பான் கார்டு வைத்திருப்பதாகவும், அவற்றில் 60.5 கோடி கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க டிசம்பர் 31, 2025 வரை அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்க தாமதம் ஏற்பட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம்.
ஒருவேளை இணைக்கப்படவில்லையென்றால், பான் கார்டு செயலிழந்து விடும். பான் கார்டு செயலிழந்தால், வருமான வரி தாக்கல், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்பட வங்கிகளில் நிதிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது.
இதையும் படிக்க:இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!
Aadhaar now mandatory for PAN