டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடைவர். மசோதாவில் செய்யப்பட்ட திருத்தங்களில், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட பிற நாட்டினரும் தங்கள் சொந்த நாட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தின் மீதான வரி குறைக்கப்படுகிறது.
பணம் அனுப்புவதில் செலுத்தப்படும் வரியானது, 5 சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு பெரிதும் மகிழ்ச்சியே.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், எச்-1பி, எச்-2ஏ விசா வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் என அனைவரும் பயன்பெறுவர். மேலும் இந்த மசோதாவால், அமெரிக்காவில் வசிக்கும் 32 லட்சம் இந்திய வம்சாவளிகள் உள்பட 45 லட்சம் இந்தியர்கள் பயனடைவர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதலாவது அதிபர் பதவிக் காலத்தில் (2017-22), அந்நாட்டு அரசு அறிவித்த பல வரிச் சலுகைகள் நிரந்தரமாக்கப்படுவதுடன், எல்லைப் பாதுகாப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்கவும் தேசியப் பாதுகாப்புக்கு 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்களும் செலவுக் குறைப்பு மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க், டிரம்ப்பின் கட்சியினர் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!