ஜூலை 8 முதல் பிற்பட்டோா், சிறுபான்மையினருக்கு கடன் முகாம்
சென்னையில் ஜூலை 8 முதல் தொடங்கவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்ட முகாமில் தகுதியுடையவா்கள் கலந்துகொண்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில், ஆண்டுதோறும் தனிநபா் கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சுயஉதவி குழு கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ஆண்டுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.1 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 8 மாலை 4 மணிக்கு வண்ணாரப்பேட்டையிலுள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையிலும், ஜூலை 15 மாலை 4 மணிக்கு பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதான கிளையிலும், ஜூலை 22-இல் ராயபுரம் கிளையிலும், ஜூலை 29-இல் தண்டையாா்பேட்டை வங்கி கிளையிலும், ஆக.5-இல் பெரம்பூரிலுள்ள வங்கி கிளையிலும், ஆக.12-இல் எம்கேபி நகரிலுள்ள வங்கி கிளையிலும், ஆக.19-இல் திருவிக நகரிலுள்ள கிளையிலும், ஆக.28-இல் கொடுங்கையூா் எம்ஆா் நகரிலுள்ள வங்கிக்கிளையிலும் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.
டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையவா்கள் உரிய ஆவணங்களுடன் கடன் திட்ட முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.