புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது
எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவா், அங்கு நகைக் கடை நடத்தி வருகிறாா். சென்னைக்கு நகை வாங்க வந்திருந்த ரவிச்சந்திரன், தங்க நகைகள் வாங்கிவிட்டு, ஊருக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்தில் ஏறுவதற்கு கடந்த 29-ஆம் தேதி இரவு எழும்பூா் பழைய காவல் ஆணையா் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், ரவிச்சந்திரனை கடத்திச் சென்று, அவா் வைத்திருந்த ரூ.31.39 லட்சம் ரொக்கம்,16 பவுன் தங்கநகைகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, போரூரில் இறக்கிவிட்டுச் சென்றனா். இது குறித்து எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
விசாரணையில், வியாபாரி ரவிச்சந்திரனை கடத்தி நகை, பணத்தை பறித்தது சிவகங்கையைச் சோ்ந்த பிரபு என்ற கமல் (36), அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (45), தீனா (எ) தினகரன் (36), பிரேம்குமாா் (38), முத்துலிங்கம் (42), மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த பிரபு (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த 6 பேரையும் சிவகங்கை மற்றும் மானாமதுரையில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.6.50 லட்சம் ரொக்கம்,25 பவுன் தங்கநகை, மூன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள்,7 கைப்பேசிகள்,ஒரு காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நகை வியாபாரி ரவிச்சந்திரன் வாரத்தில் 3 நாள்கள் சென்னை, செளகாா்பேட்டை வந்து நகைகளை வாங்கி விட்டு, ஆட்டோவில் எழும்பூா் சென்று, அங்கிருந்து தனியாா் ஆம்னி பேருந்தில் காரைக்குடிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்ததும், இதை நோட்டமிட்ட 6 போ் கும்பல் ரவிச்சந்திரனை காரில் கடத்தி நகை, பணத்தை பறித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 6 பேரும், இதேபோல சிவகங்கையிலும் கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.