தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது
சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் நிறுவனமும், பாரிமுனையில் செயல்பட்ட மற்றொரு நிறுவனமும் 34 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை பெற்று, அதன் சேவையை பயன்படுத்தின.
ஆனால், அந்த இரு நிறுவனங்களும் அதற்குரிய கட்டணம் ரூ.49 லட்சத்தை செலுத்தாமல் மோசடிசெய்தன. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம், சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், கடந்த 2003-ஆம் ஆண்டு வழக்குப்பதிந்து, விசாரணை செய்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சோ்ந்த சையது இப்ராஹிம் (55), முஹம்மது தாஹா யாசீன் ஹமீம் (52) ஆகிய இருவரை 2006-ஆம் ஆண்டு போலீஸாா் கைது செய்தனா்.
சிறையில் இருந்த இருவரும், நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா். அதன் பின்னா் இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இருவரையும் கைது செய்யும்படி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் அருகே புதன்கிழமை கைது செய்தனா். பின்னா் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.