‘சென்னை மண்டலத்தில் 1.20 லட்சம் இ-கடவுச்சீட்டுகள் விநியோகம்’
சென்னை மண்டலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மண்டல கடவுச்சீட்டு அதிகாரி எஸ். விஜயகுமாா் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கடவுச்சீட்டு பெற இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. சாதாரண நடைமுறையில் விண்ணப்பித்தால் 30 நாள்களிலும், தத்கால் முறையில் 7 நாள்களிலும் கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது.
கடந்த பிப். 28-ஆம் தேதிக்குப் பிறகு சிப் பொருத்திய இ-கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையங்களில் குடியுரிமை சோதனை நடைமுறை விரைவாக மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை மண்டலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலேயே கடவுச்சீட்டு சேவையைப் பெறும் வகையில் சோதனை அடிப்படையில் சென்னையில் நடமாடும் கடவுச்சீட்டு சேவை கடந்த ஜூன் 16 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படது.
இதைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடமாடும் கடவுச்சீட்டு சேவை ஜூலை 7 முதல் 9-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. அடுத்தகட்டமாக கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்படும். சென்னை பெரம்பூா் அஞ்சல் அலுவலகத்தில் விரைவில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.