இ-பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்
பொதுவாக பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல்கள், கால தாமதம், சிவப்பு நாடா முறை, பல ஆண்டுகள் காத்திருப்பு என அனைத்தும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டன.
மத்திய வெளியுறவு விவகாரத் துறை எடுத்த பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் மூலம், தனிநபர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது, புதுப்பிப்பது என அனைத்துமே எளிமையாக்கப்பட்டுள்ளது. கால நேரமும் குறைந்துள்ளது.
வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் பயன், மக்கள் பெறும் சேவைகளை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே பாஸ்போர்ட் சேவை திட்டம். இதன் மூலம் நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், ஊரக மற்றும் கிராமப் பகுதி மக்களும் வெகு தொலைவு பயணித்து பாஸ்போர்ட் எடுக்கும் சிக்கலைத் தவிர்த்து எளிதாக பாஸ்போர்ட் பெறும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இ-பாஸ்போர்ட் என்றால்?
இந்த ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது இ-பாஸ்போர்ட் முறை. சிப் மின்னணு சாதனம் பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்டதாக இருக்கும்.
எப்படியிருக்கும் இ-பாஸ்போர்ட்?
பாஸ்போர்ட்டின் முகப்புப் பக்கத்தில் ஒரு சிப் இடம்பெற்றிருக்கும். அதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி, பையோமெட்ரிக் விவரங்கள், புகைப்படம், கைவிரல் ரேகை என அனைத்தும் பதிவாகியிருக்கும்.
பயன்படுத்த எளிது
பாஸ்போட்டின் முகப்பில் இருக்கும் சிப்-ஐ விமான நிலைய அதிகாரிகள் வைத்திருக்கும் கணினி முன் வைத்தாலே, அது அனைத்து விவரங்களையும் கொடுத்துவிடும். இதனால் பாஸ்போர்ட்டை திறந்து பார்ப்பது, பார்கோடு ஸ்கேன் செய்வதற்கான நேரங்கள் தவிர்க்கப்படும். மேலும், பாதுகாப்பானது, விரைவாக செயல்படும், மனிதத் தவறுகளுக்கு இடமில்லை.
அங்கீகாரம்
சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வடிவமைத்த அனைத்து சிறப்பம்சங்களும் இந்த இ-பாஸ்போர்டில் அமைந்திருப்பதால், அனைத்து நாடுகளிலும் இது அங்கீகாரம் பெற்றுள்ளது.
முறைகேடு முடியாது
பாஸ்போர்ட் தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், மோசடி மற்றும் மாற்றங்கள் செய்ய முடியாது. இந்திய பயணிகளுக்கு இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
என்னென்ன சிறப்புகள்
விமான நிலையங்களில் காத்திருப்பு நேரம் குறையும்.
தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
அனைத்து நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
எம்-பாஸ்போர்ட் போலீஸ் செயலி
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதிலேயே மிகவும் சிக்கலானதாக இருப்பது காவல்துறை சரிபார்ப்புப் பணி. அதுவும், பயனர் இருக்கும் இடம் உள்ளிட்டவை, விண்ணப்பம் உறுதி செய்வதை சில வாரங்கள் காலதாமதம் செய்யலாம்.
இதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது எம்பாஸ்போர்ட் போலீஸ் செயலி. தற்போது நாடு முழுவதும் 25 மாநிலங்களில் காவல்துறையினரால் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காவலர்கள் 5-7 நாள்களுக்குள் தங்களது பணியை முடிக்க ஏதுவாகிறது.
இதன் மூலம், காவலர்களுக்கு செல்ஃபோன் மூலம் நோட்டிஃபிகேஷன் வந்துவிடும். அவர்கள் விண்ணப்பித்தவரின் வீட்டுக்குச் சென்று தாங்கள் திரட்டிய தகவல்களை நேரடியாக பதிவேற்றம் செய்துவிடலாம். இதில் காகிதத்துக்கு வேலையே இல்லை. தாமதம் ஆவதும் தவிர்க்கப்படும்.
இ-பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் பாஸ்போர்ட் சேவா கேந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.passportindia.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். இந்த ஒரு இணையதளம் மட்டுமே உள்ளது.
புதிய பயனராக இருப்பின், இந்த முகவரியில் உங்கள் விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், உங்கள் லாக்-இன் விவரங்களை அளித்து உள்ளே செல்லலாம்.
அதில் இ-பாஸ்போர்ட் என்பதை தேர்வு செய்யவும். பிறகு அதில் வரும் படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், துணைப் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும்.
உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேரடியாக வரும் இடத்தைத் தேர்வு செய்யவும்.
படிவத்தை பூர்த்தி செய்ததும், யுபிஐ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுகள் அல்லது நெட்பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவை அனைத்தும் முடிந்ததும், நீங்கள் நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்கான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக காலை நேரங்கள் கூட்டம் குறைவாக இருப்பதாகத் தகவல்.
அதில் கூறப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் பாஸ்போர்ட் அலுவலகம் செல்லும்போது கொண்டு செல்லவும். பயோமெட்ரிக் தகவல்கள் அங்கு பதிவு செய்துகொள்ளப்படும்.
இதுமுடிந்தவுடன் நீங்கள் கொடுத்துள்ள வீட்டு முகவரிக்கு காவல் துறை அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்துவார்கள்.
காவல்துறை விசாரணை முடிந்து குறைந்தபட்சம் 10 நாள்களில் பாஸ்போர்ட் வீட்டு முகவரிக்கு வந்துவிடும்.