வாழ்வின் கடைசி 7 நிமிடங்கள்! இறந்த பிறகு என்ன நடக்கும் தெரியுமா? - உளவியல் மருத்துவர் சொல்வதென்ன?
நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்று பலவிதமான சந்தேகங்களும், குழப்பங்களும் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், தற்போது ‘தி லாஸ்ட் 7 மினிட்ஸ்’ என்ற வாக்கியம் கொண்ட ரீல்ஸ் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
நாம் இறந்த பிறகு நம் எண்ணங்கள் எப்படி இருக்கும்; சமூக வலைதள ரீல்ஸில் சொல்லப்படுவதுபோல நம் மூளை நம் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுக்கூருமா; அப்படியானால் எது மாதிரியான நினைவுகள் வரக்கூடும்; எத்தனை நிமிடங்களுக்கு இது நடக்கும் என உளவியல் மருத்துவர் டாக்டர். சத்யா அவர்களிடம் கேட்டோம்.

''அறிவியல்படி, மனிதனின் இறப்பை மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடு நிறுத்தத்தின் மூலம் கண்டறியலாம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள், ‘மனிதனின் இறப்பிற்கு பின்பும் லாஸ்ட் பர்ஸ்ட் ஆப் பிரைன் ஆக்டிவிட்டி ( last burst of brain activity) என்று சொல்லக்கூடிய நரம்பியல் உந்துதல்கள் நடைபெறும்’ என்கிறார்கள்.
2023-ல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட எலக்ட்ரோ என்செபலோ கிராம் (EEG – electro encephalo gram) ஆய்வில், இதயம் வேலை செய்வதை நிறுத்துவதற்கு சற்று முன்னும் பின்னும், காமா அலைவுகள் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட நரம்பியல் அலைகளில் மாற்றங்களைக் கண்டறிந்தனர். நம் உயிர்ப்புடன் இருக்கும்போது நடைபெறும் நரம்பியல் செயல்பாடுகளைவிட, அதீத வேகத்துடன் இந்த செயல்பாடுகள் நிகழும் எனவும் அந்த ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். காமா அலைவுகள் உள்பட பல்வேறு வகையான அலைவுகள், நம் வாழ்நாள் நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்குகளுடன் தொடர்புடையது என்பதையும் கண்டறிந்தனர்.
இது மட்டும் அல்லாது, லைஃப் ரிவ்யூ பினாமினா (life review phenomenon) என்று சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு, அதாவது நம் வாழ்நாளில் நடைபெற்ற இனிமையான நிகழ்வுகள், மறக்க முடியாத சந்தர்ப்பங்கள் அந்த நேரத்தில் ஒரு வெளிச்சம்போல் நினைவுகளில் வந்து செல்லுமாம்.
நரம்பியல் செயல்பாடுகளுக்குக் காரணமான நம் உடலில் இருக்கும் நியூரோ கெமிக்கல்ஸ், மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன்(dopamine) மற்றும் செரோடோனின் (serotonin) இரண்டையும் வெளியிடும். நம் மனதிற்கு பிடித்தவர்கள் இடத்தில்தான் நமக்கு அதிகமான மகிழ்ச்சியை தரக்கூடிய நிகழ்வுகள் கிடைக்கும். இந்த நிகழ்வுகளின் வழியேதான் நியூரோ கெமிக்கல்ஸ்கள் வெளியிடப்படும். இதனால் நமக்குக் கிடைக்கிற மன அமைதி, மகிழ்ச்சி, காதல் போன்றவற்றை நினைவுகளாக நம்முடைய மூளை சேமித்து வைக்கிறது.
இதனால்தான், கடந்த காலம்பற்றி யோசிக்கையில், நம் வாழ்க்கையில் நடந்த கவலை, அதிருப்தி, அழுகை போன்ற சம்பவங்களை நினைவுக்கூராமல் மகிழ்ச்சியான நிகழ்வுகளை அதிகமாக நம் மூளை நினைவுக்கூரும். உதாரணம் சொல்லவேண்டுமென்றால், பள்ளி நாட்களைப்பற்றி யோசித்தால் டீச்சரிடம் அடி வாங்கியதைவிட நண்பர்களுடன் சேர்ந்து அடித்த லூட்டிகள்தான் நம் எல்லோருடைய நினைவுக்கும் அதிகமாக வரும்.

இது சிந்திக்கும் திறனுடைய அனைத்து உயிர்களுக்கும் நிகழும். இந்த சேமித்து வைக்கப்பட்ட இனிமையான நிகழ்வுகள் நாம் இறந்த பிறகு சுமார் 7 நிமிடங்களுக்கு நம் நரம்பியல் செயல்பாடுகளின் மூலம் பின்னோட்டமாக நம் நினைவுகளில் வந்து செல்லும். இதைத்தான் தி லாஸ்ட் ஸ்வீட்டஸ்ட் 7 மினிட்ஸ் ( The last sweetest 7 minutes) என்கிறார்கள்’’ என்று முடித்தார் டாக்டர். சத்யா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...