‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தொடக்கம்: வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்த முத...
நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!
எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார்.
எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியுடன் கூடிய அணையைக் கட்ட அந்நாட்டு அரசு நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்தது.
”கிராண்ட் எத்தியோப்பியன் ரெனைசான்ஸ் டேம்” என்று அழைக்கப்படும் அந்த அணையால் தங்களுக்கு வழங்கப்படும் நீர்பகிர்வானது பாதிக்கப்படும் எனக் கூறி, எகிப்து அரசு அதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், தங்களது நாட்டின் வளர்ச்சியாகக் கருதப்படும் அணையைக் கட்டுவதற்கு, மற்றொரு நாட்டின் அனுமதி தேவையில்லை எனக் கூறி, நைல் நதியின் மீது அணைக் கட்டும் பணிகளை கடந்த 2011-ம் ஆண்டு எத்தியோப்பியா அரசு தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா நடைபெறும் எனவும், எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார்.
சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இந்த அணையை மைப்படுத்தி எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
முன்னதாக, சூடான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்தப் புதிய நீர்மின் அணையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6,000 மெகாவாட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.