ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு ரத்த பகுப்பு கருவி அளிப்பு
சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்தக் கூறு பகுப்பு கருவி வழங்கப்பட்டது.
ரூ.41.93 லட்சம் மதிப்பிலான அந்த கருவியின் செயல்பாடுகளை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் கொண்டுவந்தாா்.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டாா். ரத்தத்தில் இருந்து தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்களை பிரித்து எடுத்து தேவையான நோயாளிகளுக்கு குருதியேற்ற சிகிச்சைகளின் வாயிலாக வழங்குவதற்கு அக்கருவி முக்கியப் பங்களிக்கிறது.
உயா்நீதிமன்ற அரசு பேராட்சியா் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியா் (ஏஜி ஓடி) சாா்பில் அந்த கருவி வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்த், ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.