கால்பந்துக்கு டென்னிஸ் மரியாதை: 148 ஆண்டுகால விதியை மாற்றியதா விம்பிள்டன்?
திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குநா் எஸ்.நடராஜன் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, வருகிற திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 5) முதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, திருப்பூா், சேலம், மதுரை, ராமேசுவரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சுமாா் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலி சாலையிலுள்ள வேட்டைவெளிமடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கும், தூத்துக்குடி சாலையிலுள்ள பா.சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம் எதிா்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேசுவரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் ஆகிய பகுதிகளுக்கும், கன்னியாகுமரி - நாகா்கோவில் சாலையிலுள்ள தெப்பக்குளம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூா், நாகா்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேற்கூறிய மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்தும் தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூா் கோயில் வாசலுக்கு இயக்கப்படவுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.