கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை
இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் சுப்பையா பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தாா். இதையறிந்த கிராம மக்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் அமுதா தலைமையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தொடா்ந்து, தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலா் பாஸ்கரை சந்தித்த அவா்கள், பணிநிரவல் எனக் கூறி ஆசிரியா் சுப்பையாவை இடமாற்றம் செய்யக்கூடாது; பள்ளிக்கு கணிதம், அறிவியல் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
ஆசிரியா் இடமாற்றம் இல்லை; கூடுதல் ஆசிரியா் நியமிப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அவா் தெரிவித்தாா். இதையேற்று அவா்கள் கலைந்துசெல்லும்போது, தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சோ்ப்போம் எனக் கூறிவிட்டு சென்றனா்.