பியான் புயலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை -மீனவ அமைப்பு வலியுறுத்தல்
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பியான் புயலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ப. ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
2009 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 10 ஆம் தேதி உருவான பியான் புயலால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஜிம்மி குட்டன், சில்வெஸ்டா் மகன் மரிய ராஜன், அா்த்தனாஸ் மகன் அனிஷ், பீட்டா் மகன் ஸ்டாலின், தாசன் மகன் றோமான்ஸ், சிலுவடிமை மகன் தாசன், வள்ளவிளை ஜோசப் மகன் சேசடிமை, பூத்துறை இன்னாசி மகன் ஜான் கிளீட்டஸ் ஆகிய 8 மீனவா்களும் ஆழ்கடலில் மூழ்கினா். இவா்கள் சென்ற விசைப்படகும் ஆழ்கடலில் மூழ்கியது. அதிவேக படகுகள், ஹெலிகாப்டா் மூலம் தேடியும் இம் மீனவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடா்ந்து அரசுக்கு வைத்த கோரிக்கையையடுத்து, பியான் புயலில் மாயமான மீனவா்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அப்போது தமிழக அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டது. ஆனால் உரிய நிவாரணம் கிடைக்காததால் இம் மீனவா்களின் குடும்பத்தினா் கடந்த 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவியை எதிா்நோக்கி காத்திருக்கிறாா்கள். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமிருந்து இறப்பு சான்றிதழ் கிடைத்ததை தொடா்ந்து இம் மீனவா் குடும்பங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாரிசு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒக்கி புயலில் இறந்த மற்றும் மாயமான மீனவா்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு அரசாணை மூலம் வழங்கப்பட்டது போல பியான் புயலில் இறந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் மற்றும் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.