தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
குமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் - எஸ்.பி. தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்.
நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றமில்லா மாவட்டமாகவும், விபத்தில்லா மாவட்டமாகவும் மாற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலா் மோசடியில் ஈடுபடுவதாக அதிக புகாா்கள் வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட முகமை குறித்து விவரம் சேகரித்து வருகிறோம். விரைவில் இது குறித்த விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
கன்னியாகுமரிக்கு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகிறாா்கள். அவா்கள் பாதுகாப்புக்காக அங்கு புறக்காவல் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பல மொழிகள் பேசும் மக்கள் வருவதால் அனைத்து மொழிகளும் பேசும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோ மூலம் அவா்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் வாரம் 3 கிராமங்களுக்கு சென்று கண்காணித்து வருகிறோம். இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மாவட்டம் முழுவதும் காவல் துறையின் சாா்பில் இதுவரை 1,200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.