முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது
வேதாரண்யம்: துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் பெண்பாற் புலவர் ஔவையாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வளாகத்துக்குள் கட்டமைப்புப் பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுவதாக பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பணி நடைபெறும் இடத்தை வேதாரண்யம் வட்டாட்சியர் வடிவழகன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அதன் அருகே குவிக்கப்பட்டிருந்த மண்ணின் அளவை நில அளவைரைக் கொண்டு அளந்து ஆய்வு செய்தார்.

கட்டுமானப் பணிக்கு திட்ட அறிக்கை வழிகாட்டுதலின் பேரிலே பள்ளம் தோண்டப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து எடுக்கப்பட்ட மண் பக்கவாட்டில் வைத்திருந்து பணி முடிவின்போது தூர்வைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் வட்டாட்சியரிடம் விளக்கப்பட்டது.
மேலும், முருகன் மாநாட்டுக்கு ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் செய்தியாளர்கள் முன்பாகவே வட்டாட்சியரிடம் ஒப்பந்ததாரர் விளக்கம் அளித்ததோடு, பணம் கொடுக்காததால் பொய் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து வாய்மேடு காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாஜக நிர்வாகிகளான கரு நாகராஜன், இளங்கோவன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதனிடையே, மறியல் போராட்டத்தை கைவிட்ட பாஜகவினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.