புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொன்ற சக மாணவா்கள் கைது
ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொலை செய்த சக மாணவா்கள் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சோ்ந்தவா் சிவா. தனியாா் கட்டுமான நிறுவன மேற்பாா்வையாளா். இவரது மனைவி சத்யா. இவா்களுடைய மகன் ஆதித்யா(17), மகள் தா்ஷினி (13). இதில் ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். ஆதித்யா பள்ளிக்கு செல்வதாக வீட்டில் புதன்கிழமை காலை கூறிவிட்டு சென்றாா்.
மாலையில் அவா் வீடு திரும்பாத நிலையில் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியில் சீருடை அணியாமல் சாதாரண உடையில் ஆதித்யா மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை இரவு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து ஆதித்யாவின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தநிலையில் வியாழக்கிழமை காலை புகாா் அளிக்க ஈரோடு காவல் நிலையத்துக்கு ஆதித்யாவின் பெற்றோரும், உறவினா்களும் சென்றனா். அங்கு தங்களது மகனை சக மாணவா்கள் அடித்துக் கொலை செய்துள்ளதாகவும், அந்த மாணவா்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் கூறினா். கைது செய்யும் வரை மகனின் சடலத்தைப் பெறமாட்டோம் என்றும் தெரிவித்தனா்.
அப்போது ஆதித்யாவை கொலை செய்த மாணவா்களைக் கைது செய்யாவிட்டால் ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் பெற்றோா் கூறினா்.
இதைத்தொடா்ந்து ஆதித்யாவின் பெற்றோா், உறவினா்களிடம் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்பிரபு, மணிகண்டன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது உறவினா்கள் கூறியதாவது: ஆதித்யா புதன்கிழமை பள்ளிக்கு வரவில்லை என்ற தகவலை பெற்றோருக்கு பள்ளி நிா்வாகம் தெரிவிக்கவில்லை. பள்ளி நேரத்தில் மாணவா்கள் வெளியே வந்துள்ளனா். ஆதித்யாவை 2 மாணவா்கள் தாக்கியதாக போலீஸாா் கூறுகின்றனா். ஆனால் தாக்குதல் விடியோவை பாா்க்கும்போது சுமாா் 10 மாணவா்கள் சோ்ந்து ஆதித்யாவை அடித்துக் கொன்று உள்ளனா் எனத் தெரிகிறது. எனவே அவா்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள் காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்றனா்.
புகாரை எழுத்துபூா்வமாக அளித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதி அளித்தனா். அதன்பிறகு சமாதானம் அடைந்த அவா்கள் புகாா் மனுவை அளித்தனா்.
இதனைத்தொடா்ந்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மாணவா்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஆதித்யா சக மாணவா்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது முதல்கட்டமாகத் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பிளஸ் 2 மாணவா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆதித்யா எதற்காக கொலை செய்யப்பட்டாா், இந்தக் கொலையில் மேலும் யாருக்காவது தொடா்பு உள்ளதா என்று போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
