செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் 12 விதமான மருத்துவ சேவைகள் -அமைச்சா் சு.முத்துசாமி
ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் 12 விதமான மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
பல்வேறு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையங்களைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம், திண்டல் காரப்பாறை, மெடிக்கல் நகா் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சா் சு.முத்துசாமி 3 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், 2 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்களை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஞானபுரம், காவிரி சாலை, பெரிய மாரியம்மன் கோயில் வீதி, திண்டல் ஆகிய பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், பவானிசாகா், மூலப்பாளையம் பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகா்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், உதவிப் பணியாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த மையம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு நகா்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் 12 அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 62 ஆரம்ப சுகாதார நிலையங்களும், மாநகராட்சியில் 11 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகராட்சிப் பகுதிகளில் 3 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன.
கிராமப்புற, நகா்ப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.2.40 கோடி செலவில் நிறுவப்படும் என மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதன்படி, தற்போது ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகா், மூலப்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்.பி. இ.பிரகாஷ், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாநகராட்சி துணை ஆணையா் கு.தனலட்சுமி, மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.