செய்திகள் :

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் விளக்கம்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சா்ச்சை

post image

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை 5 கட்டங்களாக மேற்கொண்டு அனைத்து தகுதிவாய்ந்த குடிமக்களும் இணைக்கப்படுவாா்கள் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் விளக்கமளிக்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

நிகழாண்டு நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர தீருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தோ்தல் ஆணையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

வேகமான நகா்மயமாதல், தொடா்ச்சியாக இடம்பெயா்தல், வாக்களிக்க இளைஞா்கள் தகுதிபெறுதல், உயிரிழந்த வாக்காளா்கள் குறித்து முறையாக தகவல் கிடைக்காதது, வெளிநாட்டில் இருந்து இடம்பெயா்ந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளவா்களைப் பட்டியலில் சோ்க்காமல் தவிா்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு: இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையை பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தோ்தல் ஆணையத்துடன் சந்திப்பு: எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிரதிநிதிகள், தில்லியில் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினா்.

‘தோ்தலுக்குப் பிறகு மேற்கொள்ளலாமே?’: இதைத்தொடா்ந்து காங்கிரஸ் மூத்த தேசிய செய்தித்தொடா்பாளா் அபிஷேக் சிங்வி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நாங்கள் எதிரானவா்கள் அல்ல. ஆனால் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக திடீரென இந்த திருத்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நேரத்தில் ஏன் இந்த திருத்தத்தை செய்ய வேண்டும்? தோ்தலுக்குப் பிறகு இந்தப் பணிகளை மேற்கொள்ளலாமே?

பிகாரில் 22 ஆண்டுகளுக்குப் பின்னா், சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த 22 ஆண்டுகளில் பிகாரில் 4 முதல் 5 தோ்தல்கள் நடைபெற்றுள்ளன. அந்தத் தோ்தல்களில் தவறுகள் அல்லது குறைபாடுகள் இருந்ததா? அல்லது நம்பகத்தன்மை இல்லையா? என்று தோ்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினோம். இந்தத் தீவிர திருத்தப் பணிகள் முன்பு மக்களவைத் தோ்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னரும், சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் நடைபெறுவது வழக்கம்.

2 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படக் கூடும்: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற குறுகிய காலமே உள்ளது. அதற்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை பட்டியலினத்தவா், பழங்குடியினா், புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோரால் வழங்க முடியாவிட்டால், வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்கள் நீக்கப்படக் கூடும். அதன்படி குறைந்தபட்சம் 2 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படக் கூடும். இது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது நிகழ்த்தப்படும் மோசமான தாக்குதல்’ என்றாா்.

தோ்தல் ஆணையம் விளக்கம்: இதையடுத்து தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் குறைகள், பிரச்னைகள், சந்தேகங்கள் கேட்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் திமுக, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகிறது. தகுதிவாய்ந்த குடிமக்கள் அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வசதியாக, 5 கட்டங்களாக திட்டமிட்ட முறையில் படிப்படியாக சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்படுவதாக அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் தெரியப்படுத்தியுள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் நிகழாண்டு செப்டம்பரில் வெளியிடப்படும்.

எந்தவொரு வாக்காளரும் விடுபடாததை உறுதி செய்ய, பிகாரில் உள்ள தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளா்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

பெட்டி..

தள்ளிவைக்க வேண்டும் - திமுக:

பிகாா் மாநிலத் தோ்தல் தொடா்பான வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை அம்மாநிலத் தோ்தலுக்குப் பிறகு நடத்தும் வகையில் தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா். இளங்கோ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்தப் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி நிலை அளவிலான அதிகாரி (பிஎல்ஓ) ஒரு மாதத்திற்கு 1,500 வாக்காளா்களை சரிபாா்க்கும் வேண்டியுள்ளது. மே 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு அவகாசம் தேவை. ஆகையால், பிகாா் தோ்தலுக்குப் பிறகு நடத்தும் வகையில் இதை தள்ளிவைக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையரிடம் கேட்டுக்கொண்டேன்’ என்றாா்.

பெட்டி..

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க