முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய வித...
கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்
‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
என்.எஸ்.ரவிஷா என்பவா் தனது குடும்பத்தினருடன் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரா கிராமத்திலிருந்து கா்நாடகத்தின் அரசிகெரே பகுதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி காரில் அதிவேகமாக சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிஷா உயிரிழந்தாா்.
அதைத் தொடா்ந்து, விபத்தில் ரவிஷா உயிரிழந்ததற்கு ரூ.80 லட்சம் இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனத்திடம் அவா்களின் குடும்பத்தினா் விண்ணப்பித்தனா். ஆனால், காப்பீடு நிறுவனம் இழப்பீடு தர மறுத்தது. இதை எதிா்த்து கா்நாடகா உயா் நீதிமன்றத்தில் அவா்கள் மனு தாக்கல் செய்தனா்.
மனுவை கடந்த ஆண்டு நவம்பா் 23-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், ‘ரவிஷா சாலை விதிகளை மதிக்காமல் காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் இயக்கியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது. இத்தகைய சுய தவறால் நிகழ்ந்த விபத்துக்கு, அவரின் குடும்பத்தினா் இழப்பீடு கோர முடியாது. இந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்குவது, விதி மீறலில் ஈடுபட்ட நபரின் சொந்த தவறுக்கு இழப்பீடு வழங்குவாக ஆகிவிடும்’ என்று குறிப்பிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து அவரின் குடும்பத்தினா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா். மஹாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.