மாஜி கணவரின் ரூ.30,000 கோடி சொத்து... நடிகை கரிஷ்மா கபூருக்கு கிடைக்குமா?
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர் என்பவரை 2003-ம் ஆண்டு மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அத்திருமணம் இருந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தபோதும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இருவரும் சண்டையிட்டு பிரிந்தனர்.
இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. கணவர் சஞ்சய் கபூர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகவும், மகனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது இங்கிலாந்தில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்ததாகவும் நடிகை கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இருந்தார். இவர்களது விவாகரத்து வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இறுதியில் இரண்டு குழந்தைகளையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட கரிஷ்மா கபூருக்கு ஒரே தவணையாக சஞ்சய் கபூர் ரூ.70 கோடி கொடுத்தார். அதோடு தனது இரண்டு குழந்தைகளின் படிப்புக்காக மாதம் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் ரூ.14 கோடிக்கு டெபாசிட் பத்திரம் வாங்கிக்கொடுத்துள்ளார். மேலும் மும்பையில் ஒரு வீடும் கொடுத்தார்.

சஞ்சய் கபூர் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆட்டோமொமைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சோனா கோம்ஸ்டர் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அதோடு போலோ விளையாட்டையும் மிகவும் விரும்பினார். அவர் சிறந்த போலோ விளையாட்டு வீரராகவும் இருந்தார். அவர் லண்டனில் போலோ விளையாடிக்கொண்டிருந்தபோது அவரது வாயில் தேனீ ஒன்று புகுந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்.
அவரது மரணத்தால் அவரது ரூ.30 ஆயிரம் கோடி கம்பெனியின் வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் கரிஷ்மா கபூரின் இரண்டு வாரிசுகளான சமைரா மற்றும் கியான் ஆகிய இரண்டு பேருக்கும் ரூ.30 ஆயிரம் கோடி சொத்தில் பங்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கரிஷ்மா கபூருக்கு இந்த சொத்தில் சிறிதும் கிடைக்காது என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே போன்று கரிஷ்மா கபூரின் குழந்தைகளுக்கும் இறந்து போன சஞ்சய் கபூரின் சொத்தில் எந்த வித உரிமையும் இருக்காது என்றும், அதில் அவர்களுக்கும் பங்கு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
சஞ்சய் கபூரின் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கம்பெனிக்கு அவரின் மூன்றாவது மனைவி பிரியா சச்சிதேவ்தான் உரிமை கொண்டாட முடியும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்தனர். பிரியாவிற்கும், சஞ்சய் கபூருக்கு ஒரு மகன் இருக்கிறான். பிரியா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்திருந்தார். அதில் பிரியாவிற்கு ஒரு மகள் இருக்கிறார். இப்போது சஞ்சய் கபூரின் தனிப்பட்ட சொத்து மற்றும் அவரது கம்பெனிக்கு இந்த மூன்றுபேர் தான் உரிமை கோர முடியும் என்று கூறப்படுகிறது.
சஞ்சய் கபூரின் சொத்தை தன் வசப்படுத்த ஏற்கனவே சஞ்சய் கபூரின் கம்பெனியில் பிரியா இயக்குனராக இணைந்து விட்டார். இதனால் கம்பெனி இனி அவரது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் வந்துவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரியா நினைத்தால் சஞ்சய் கபூரின் கம்பெனியில் கரிஷ்மா கபூரின் குழந்தைகளுக்கு பங்கு கொடுக்கலாம்.

17வது வயதிலேயே நடிக்க வந்தார்!
கரிஷ்மா கபூர் தனது 17வது வயதிலேயே நடிக்க வந்தார். அவரின் தந்தை அவர்களை விட்டுபிரிந்து சென்ற பிறகு கரிஷ்மாவையும், அவரது சகோதரி கரீனா கபூரையும் அவர்களது தாயார் பபிதா தனி ஆளாக நின்று போராடி வளர்த்தார். எனவேதான் கரிஷ்மா கபூர் தனது 17 வயதில் நடிக்க வந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆரம்பத்தில் கரிஷ்மா கபூர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்தார். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அஜய் தேவ்கன் பின்னர் காஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை கரிஷ்மா கபூர் காதலித்தார். இந்த காதலாவது நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கரிஷ்மா கபூருக்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே 2002ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
ஆனால் அடுத்த சில மாதங்களில் அத்திருமணம் காரணமே சொல்லாமல் நின்று போனது. அதன் பிறகு சஞ்சய் கபூரை திருமணம் செய்த கரிஷ்மா கபூர் 2016ம் ஆண்டு அத்திருமணத்தையும் சட்டப்பூர்வமாக முறித்துக்கொண்டு மும்பைக்கு வந்துவிட்டார். மும்பைக்கு வந்த பிறகு மீண்டும் தொழிலதிபர் சந்தீப் என்பவரை காதலித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மறு திருமணம் செய்து கொள்வதை விட தனது குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம் என்று கருதி இருவரும் சேர்ந்து அக்காதலை முறித்துக்கொண்டனர்.