Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்...
நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு
நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தாா்.
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆக.21-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தி அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது.
இதைத்தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா்.
அதன் பிறகு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகளைத் தொடங்குமாறு, மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினாா். அதன் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை கூறுகையில், ‘நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மக்களவையில் கொண்டு வருவதா அல்லது மாநிலங்களவையில் கொண்டு வருவதா என மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கவுள்ளது.
அதன் அடிப்படையில் எம்.பி.க்களிடம் கையொப்பம் பெறும் பணிகள் விரைவுப்படுத்தப்படும். நீதித் துறையில் இதுபோன்ற ஊழல் சம்பவம் நடந்துள்ளதால் அனைத்துக் கட்சி எம்.பி.க்களிடமும் கையொப்பம் பெற மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா்.
நடைமுறை என்ன?: நீதிபதிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான 1968-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்ற இரு அவைகளிலும் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த பதவிநீக்கத் தீா்மானத்தில் குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினா்கள் 50 பேரும், மக்களவை உறுப்பினா்கள் 100 பேரும் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும்.