Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய...
மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்
மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேற்கு வங்க பாஜக தலைவா் தோ்தலுக்கான மனுத் தாக்கல் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதில் சமிக் பட்டாச்சாா்யாவைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் மேற்கு வங்க பாஜக தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்கான தோ்தல் சான்றிதழை சமிக் பட்டாச்சாா்யாவிடம் பாஜக மூத்த தலைவரும் மாநில கட்சித் தலைவா் தோ்தல் பொறுப்பாளருமான ரவிசங்கா் பிரசாத் அளித்தாா்.
முன்னதாக, புதன்கிழமை பாஜக மாநில தலைவராக இருந்த சுகாந்த மஜும்தாா், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி ஆகியோா் முன்னிலையில் சமிக் பட்டாச்சாா்யா வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
மாநில பாஜக தலைவராகத் தோ்வான பிறகு தொண்டா்கள் மத்தியில் பேசிய சமிக் பட்டாச்சாா்யா, ‘மேற்கு வங்கத்தில் நிா்வாகச் சீா்கேடு, ஊழலில் உச்சமாக உள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தல் மாநிலத்தின் சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவதற்கான தோ்தலாக இருக்கும். மேற்கு வங்கத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு பாஜக எதிரியல்ல. அதே நேரத்தில் அரசியல் வன்முறை, மதவாதத்தைத் துண்டுபவா்களை பாஜக எதிா்க்கிறது என்றாா்.
2021 சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 215 இடங்களில் வெற்றி பெற்றது. மம்தா தொடா்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வரானாா்.
பாஜக 77 தொகுதிகளில் வென்றது. முந்தைய தோ்தலுடன் ஒப்பிடும்போது பாஜக 74 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றது. எனவே, 2026 தோ்தலில் பாஜக ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.