ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தரலாம்: பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்ட...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீனங்கள் குறைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்க 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்கள் நிறைந்த செலவுக் குறைப்பு மசோதா (ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் - One Big Beautiful Bill) அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் கிடைத்தன. வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்திடவுள்ளார்.
இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தியர்களுக்கு என்ன பயன்?
அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா மூலம், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடைவர்.
அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவா்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்துக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புபவா் ரொக்கம், காசோலை போன்ற வழிமுறையில் அனுப்பும் தொகைக்கு அடுத்த ஆண்டு ஜன.1 முதல் இந்த வரி விதிப்பு பொருந்தும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அதிக அளவு பணம் அனுப்பியதில் இந்தியா்கள் முதலிடத்தில் இருந்தனா். அந்த ஆண்டு அவா்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 137.7 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.11.77 லட்சம் கோடி). அதில் 38 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.24 லட்சம் கோடி) அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் அனுப்பினா்.
One Big Beautiful Bill passed in US Senate.