டெஸ்ட்டில் முதல் இரட்டை சதம்; ஷுப்மன் கில் படைத்த சாதனைகள்!
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 3) இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருப்பினும், ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, கேப்டன் ஷுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்ட, வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாடி வருகிறார்.
இரண்டாம் நாளின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில், டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 311 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார்.
இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஷுப்மன் கில் படைத்த சாதனைகள்
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
Leading from the front
— BCCI (@BCCI) July 3, 2025
First Indian Captain to register a double-century in Test cricket in England
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGillpic.twitter.com/Pm7pq7GRA9
விராட் கோலிக்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இரட்டை சதம் விளாசியிருந்தார்.
சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷான், லார்ட்ஸில் 193 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். 25 வயது 298 நாள்களில் ஷுப்மன் கில் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 23 வயது 39 நாள்களில் பட்டோடி இந்த சாதனையை படைத்துள்ளார்.
Indian captain Shubman Gill has scored his maiden double century in Test cricket.
இதையும் படிக்க: ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர்: முன்னாள் இங்கிலாந்து வீரர்