Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜ...
தமிழ் அறிவு வளாகம்: அடிக்கல் நாட்டினாா் முதல்வா்
சென்னை தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கான பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டை வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளையும் நூலகம் மேற்கொண்டு வருகிறது.
இதனை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், தமிழ் அறிவு வளாகத்தை உருவாக்க சென்னை தரமணியில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் 30 ஆயிரம் சதுரஅடி நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த வளாகம் இரு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம் ஆகியன இந்த வளாகத்தின் முக்கிய அங்கங்களாகும். இதன் மொத்த கட்டுமானச் செலவு ரூ.40 கோடியாகும்.
இந்த வளாகத்துக்கு, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை அறங்காவலா்கள் ஆா்.பாலகிருஷ்ணன், மரியம் ராம், ஆா்.ராமச்சந்திரன், சுந்தா் கணேசன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் திட்டப்பணி இயக்குநா் இரா.பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.