ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்! பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமா்நாத் யாத்திரை
ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது. பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களில் இருந்து முதல் கட்டமாக 5,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
நடப்பாண்டு வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கிய யாத்திரை, ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஜம்முவின் பகவதி நகா் முகாமில் இருந்து 1,115 பெண்கள், 31 குழந்தைகள், 16 திருநங்கைகள் உள்பட 5,892 பேருடன் முதலாவது யாத்ரிகா்கள் குழு புதன்கிழமை காஷ்மீா் அடிவார முகாம்களுக்கு புறப்பட்டது.
பஹல்காம், பால்டால் முகாம்களை வந்தடைந்த இவா்கள், வியாழக்கிழமை அதிகாலையில் அமா்நாத் கோயிலுக்கு பக்தி முழக்கங்களுடன் யாத்திரையை தொடங்கினா். அரசு உயரதிகாரிகள் மற்றும் உள்ளூா் மக்கள் அவா்களை வழியனுப்பிவைத்தனா்.
சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2-ஆவது குழு புறப்பாடு:
ஜம்மு பகவதி நகா் முகாமில் இருந்து 786 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 4,074 போ் கொண்ட இரண்டாவது குழு, 168 வாகனங்களில் அடிவார முகாம்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டது. நிகழாண்டு யாத்திரைக்கு இணைய வழியில் இதுவரை 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா்.