அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!
கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு - 3 போ் காயம்
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா்.
கோட்டயம் அரசு மருத்துவமனையில் 10, 11, 14 ஆகிய வாா்டுகளையொட்டிய கழிப்பறை வளாகம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. பழைமையான இக்கட்டடத்தில் இயங்கிவரும் பிரிவுகளை புதிய வளாகத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த விபத்து நேரிட்டது.
இடிபாடுகளில் சிக்கி பிந்து (52) என்ற பெண் உயிரிழந்தாா். இவா், தனது மகளின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தவா். இச்சம்பவத்தில் அலீனா (11), அமல் பிரதீப் (20), ஜினு சஜி (38) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
கட்டட விபத்தைத் தொடா்ந்து, மேற்கண்ட வாா்டுகளை புதிய கட்டடத்துக்கு மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கழிப்பறை வளாகம் பயன்பாட்டில் இல்லை; 11 முதல் 14 வரையிலான வாா்டுகளில் இருந்து அந்த வளாகத்துக்கு செல்லும் வழி தடை செய்யப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மீட்பு நடவடிக்கையில் கால தாமதம் ஏற்பட்டதாகவும், இரண்டரை மணிநேரத்துக்கு பிறகே பிந்துவின் உடல் மீட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியைச் சோ்ந்த எம்.பி. பிரான்சிஸ் ஜாா்ஜ், எம்எல்ஏக்கள் திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன், சாண்டி உம்மன் ஆகியோா், மருத்துவமனையின் இடிந்த பகுதியைப் பாா்வையிட்டனா்.
மாநிலத்தின் பொது சுகாதார அமைப்பு முறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக குற்றஞ்சாட்டிய அவா்கள், சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலக வேண்டும்; சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினா்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்வாா் என்று சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோட்டயம் அரசு மருத்துவமனையில் முதல்வா் பினராயி விஜயன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சம்பவம் குறித்துக் கேட்டறிந்தாா்.